தொடர் மழை எதிரொலி: மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர்மழை எதிரொலியாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-15 21:30 GMT
கடமலைக்குண்டு,


தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி உள்ளது. கடந்த சில தினங்களாக, மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நேற்று மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவிக்கு வந்திருந்தனர்.

ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோல வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

கடமலைக்குண்டு கிராமத்தை கடந்து மூல வைகை ஆற்றில் நேற்று தண்ணீர் வந்தது. தொடர்ந்து மழை நீடிப்பதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டிருப்பதால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நீங்கியது. இதேபோல தொடர் மழையால் வனப்பகுதியில் உள்ள சிறிய ஓடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

இதேபோல் வடக்கு மலை, குரங்கணி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றில் இருந்து வருகிற தண்ணீரை, போடி முந்தல் சாலையில் உள்ள பிள்ளையார் தடுப்பணையில் தேக்கி போடி பகுதியில் உள்ள 12 கண்மாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்தநிலையில் பிள்ளையார் தடுப்பணை நிரம்பி அருவி போல தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தொடர்மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் 3 நாட்களாக நேற்றும் அருவியில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதையடுத்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சுருளியாறு, சுரங்கனாறு நீர்வீழ்ச்சி, யானைகெஜம் மற்றும் மேற்குதொடர்சி மலையடிவாரப்பகுதியில் இருந்து ஓடைகள் மூலம் வரக்கூடிய தண்ணீரும் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமிக்கின்றன.

கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்று பாலத்தை தொடும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டாரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் உள்ள தடுப்பணை மற்றும் அதன் அருகில் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் ஆபத்தான குளியலை தவிர்க்க, பேருராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் அறிவுறுத்தலின்பேரில் 4 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி வீரபாண்டி போலீசார், முல்லைப்பெரியாற்றின் கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்