பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என, துரைபெரும்பாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள துரைபெரும்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினவிழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் கலெக்டர் ராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் ஊராட்சி செயலாளர் கஜராஜி தீர்மானங்களை வாசித்தார். அப்போது அங்கன்வாடி மையத்தில் 35 குழந்தைகள் படிக்கிறார்கள். ஆனால் குடிநீர் வசதி இல்லை எனப் பெண்கள் கூறினர். அங்கு, குடிநீர் வசதி செய்து கொடுப்பதாக காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் கூறினார்.
மேலும் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துப் பேசுகையில், எங்கள் கிராமத்தில் குடிநீர் சரியில்லை, உப்பு தண்ணீராக உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்துக்கு 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதுவும் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே குறித்த நேரத்துக்குப் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் அவதிப்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும், என்றனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசியதாவது:-
இந்தக் கிராமத்தில் குடிநீர் உப்பு நீராக வருவதாக கூறுவதால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த நேரத்துக்குப் பஸ்கள் இயக்கவும், தரைப்பாலம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து, அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற, அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் மக்கும், மக்காத குப்பை எனத் தனியாக தரம் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த ஊராட்சியில் மண்புழு உரம் தயாரிக்க கிடங்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்குக் கொட்டகை அமைத்துத் தரப்பட உள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வருகிற 20-ந்தேதி முதல், 19.11.2018 வரை கால்நடைகள் குறித்த கணக்கெடுப்புகள் நடைபெற உள்ளது. கால்நடைகளை கணக்கெடுக்கும் நபர் வீடு, வீடாக வந்து உங்களிடம் விவரங்களை கேட்பார்கள். உங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகள் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் மருந்து, தடுப்பூசிகள் வழங்கப்படும்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் பெரியசாமி, மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகேஸ்வரராவ், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், நெமிலி தாசில்தார் வேணுகோபால், வட்ட வழங்கல் அலுவலர் செல்வி, மண்டல துணைத் தாசில்தார் ஜீவிதா, தேர்தல் துணைத் தாசில்தார் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.