காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகோள்

காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-15 23:00 GMT

கரூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்தும், திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையிலிருந்தும் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், மல்லம்பாளையம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:–

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையிலிருந்து சுமார் 15 ஆயிரம் கன அடியும், பவானி சாகர் அணையிலிருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், வெள்ளம் ஏற்படும் அபாயகரமாக சூழ்நிலை ஏறபட்டு உள்ளது.

ஆகவே, வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

அதோடு பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படும் இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். குறிப்பாக தவிட்டுப்பாளையம் பகுதியில் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கரையோரப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும், தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி வாகனங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, காவிரி மற்றும் அமராவதி கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, செல்போன்களில் செல்பி படஙகள் எடுக்கவோ கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளம் சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகா‘ஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

திருப்பூர் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றிலிருந்த குப்பை மற்றும் கழிவுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிபாளையம் அணைப் பகுதியில் சாயக்கழிவுநீர் கலந்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், செய்யப்பகவுண்டன்புதூரிலுள்ள ஒரு சாயப்பட்டறைக்கு தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது அமராவதி ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளநீரை பயன்படுத்தி அதில் சாயக்கழிவுநீர் திறந்து விடப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்