என்ஜினீயர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு
திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை குபேரன்நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரத்விராஜன் (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவரது தந்தை பாண்டுரங்கன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் திருவண்ணாமலையில் தாயார் ரஜினியுடன் அவர் வசித்து வருகிறார். சென்னைக்கு சென்று விட்டு அவ்வப்போது ஊருக்கு இவர் வந்து செல்கிறார்.
இந்த நிலையில் தாயார் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு தாயாரை சிகிச்சைக்காக கடந்த மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். உடல்நிலை குணமானபின் தாயாரை அழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம், 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது.
இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.