கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சிதம்பரம் பகுதி கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-15 21:30 GMT
சிதம்பரம், 


கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமாக கொட்டி வருவதால், மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணையை வந்தடைந்ததை அடுத்து, அங்கிருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு வழியாக கொடியம்பாளையத்தில் வங்க கடலில் கலந்து வருகிறது.

இந்த நிலையில், கடலுக்குள் நீர் உள் வாங்காததால், வெள்ள நீர் எதிர்த்து பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்து, கரையோரம் உள்ள கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 7 கிராமங்களை நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து நேற்று வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் 7 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. எனவே அந்த பகுதி மக்கள் தங்களது அவசர தேவைக்கு படகுகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் வெள்ளம் பாதித்த கிராமங்களை, சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பாண்டியன் எம்.எல்.ஏ., தாசில்தார் அமுதா ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். அப்போது கிராம மக்களிடம் உங்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதிகள் ஏற்படுத்தி தருகிறோம். ஆகவே நீங்கள் பயப்பட வேண்டாம். 24 மணி நேரமும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வேளக்குடியில் இருந்து பெராம்பட்டு செல்லும் சாலை உடையும் தருவாயில் உள்ளதால், அந்த சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் மண் போட்டு பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் எதிரொலியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொள்ளிடம் ஆற்றில் தற்போது செல்லும் நீரின் அளவை விட அதிகப்படியான தண்ணீர் வரும் என்பதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனவே ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்