கழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதல் தகராறு காரணமா? போலீஸ் விசாரணை
திருவொற்றியூரில், கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் இந்திரா நகர் கரிமேடு பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அங்கு, வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் லுங்கி மற்றும் சட்டை அணிந்து இருந்தார். மர்மநபர்கள் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர்.
பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் யார்? என விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல் தகராறு
அதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன்நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடைய மகன் ஸ்ரீதர் என்ற வெங்கடேஷ்(வயது 27) என்பதும், அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
அதே சிவன் நகர் பகுதியில் உள்ள ஊர்க்காவல் படைவீரர் ஒருவரின் மனைவிக்கும், கொலையான ஸ்ரீதருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீதருக்கும், ஊர்க்காவல் படை வீரருக்கும் தகராறு ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது.
இந்த தகராறு தொடர்பாக ஸ்ரீதரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும் ஸ்ரீதருக்கும், ஊர்க்காவல் படை வீரருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
காரணம் என்ன?
இதற்கிடையில் தன்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் அதற்கு ஊர்க்காவல் படை வீரர்தான் காரணம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஸ்ரீதர் புகார் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதர், தனது நண்பருடன் வெளியில் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பிவரவில்லை. அதன்பிறகு அவர், திருவொற்றியூர் கரிமேடு பகுதியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்து உள்ளார்.
ஸ்ரீதரை கொலை செய்தவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்ன?, இந்த கொலையில் ஊர்க்காவல் படை வீரருக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.