விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முதல்–அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் - அய்யாக்கண்ணு
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முதல்–அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வானூர் அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:–
மரபணு மாற்றப்பட்ட விதைகளால், ஆண்மை தன்மை இழக்க நேரிடும். எனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கவேண்டும், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை பருவமழைக்கு முன் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்காக விவசாய நிலங்களை அழிப்பதை அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல் விவசாயிகளுக்கும் அரசு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியில் பாதியை நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால், மீசை, தாடியை பாதி எடுத்துவிட்டு முதல்–அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.