திருப்பூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: ரூ.53 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்

திருப்பூரில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் 233 பேருக்கு ரூ.52 லட்சத்து 96 ஆயிரத்து 657 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

Update: 2018-08-15 22:45 GMT

திருப்பூர்,

நாடு முழுவதும் சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் சுதந்திர தினவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், மூவர்ண நிறத்தினால் ஆன பலூன்களையும் பறக்கவிட்டார். இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய 46 அரசு அலுவலர்கள், 2 சமூக ஆர்வலர்கள், 44 போலீஸ் துறையினர், 8 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் என மொத்தம் 100 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் வருவாய்த்துறை, முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் மொத்தம் 233 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 96 ஆயிரத்து 657 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் துறையில் உள்ள மோப்ப நாய் பிரிவை சேர்ந்த டெவில், புல்லட், அர்ஜூன், வெற்றி, ராக்கி ஆகிய 5 நாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மோப்ப சக்தி மூலமாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, தீ வளையம் மற்றும் தடைகளை தாண்டி செல்வது என பயிற்சியாளர்களின் கட்டளைக்கு ஏற்ப அவைகள் செயல்பட்டது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் மாணவ–மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில் செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாமளாபுரம் லிட்ரசி மி‌ஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கேயம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 933 மாணவ–மாணவிகள் தேசிய ஒருமைப்பாட்டு பாடல்கள் மற்றும் தமிழின் பெருமை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார்கள். குளத்துப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ–மாணவிகள் யோகாவை நிகழ்த்தி காண்பித்தனர்.

கரடிவாவி எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் படுகர் நடனத்தையும், பாண்டியன்நகர் சாரதா வித்யாலயா பள்ளி மாணவ–மாணவிகள் வண்ண, வண்ண உடைகள் அணிந்து பொன்னு விளையுற பூமி என்ற தலைப்பிலான பாடல்களுக்கு நடனமாடினார்கள். மாணவ–மாணவிகளின் நடனங்களை பார்வையாளர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்