மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா: 346 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் 346 பயனாளிகளுக்கு ரூ.66¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

Update: 2018-08-15 23:00 GMT

மதுரை,

மதுரை ஆயுதப்படை மைதானதில் நடந்த 72–வது சுதந்திரதின விழாவில் கலெக்டர் வீரராகவராவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

விழாவில் 346 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

மேலும் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், காவல்துறையை சேர்ந்த 234 பேருக்கு கலெக்டர் கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, யாதவா கல்லூரி பயிலும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சித்து மெட்ரிக் பள்ளி மாணவர்களின் ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியும் நடந்தது.

கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திய அலுவலர்களுக்கு கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்த கலைநிகழ்ச்சியில் மாணவி ரூபியாபர்கானாவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகளை தேவகி மருத்துவமனை டாக்டர் நாகேந்திரன், ப்ரீத்தி மருத்துவமனை டாக்டர் சிவக்குமார் ஆகியோருக்கும், மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், எஸ்தர், கீதாரமணி ஆகியோருக்கும் கலெக்டர் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன், மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம், மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மதுரை மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் கமி‌ஷனர் அனீஷ்சேகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துணை கமி‌ஷனர் மணிவண்ணன், நகரமைப்பு அலுவலர் ரெங்கநாதன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை வக்பு வாரியக்கல்லூரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல்காதிர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நடந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்