சுதந்திர தினவிழாவில் 114 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: தேசியக்கொடியேற்றி கலெக்டர் லதா வழங்கினார்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக்கொடியேற்றி 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2018-08-15 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் 72-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லதா தேசியக்கொடியேற்றினார். பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் பறக்க விட்டனர். இதைதொடர்ந்து கலெக்டர் லதா திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கலெக்டர் லதா சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்த இடத்திற்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். பின்னர் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 இன்ஸ்பெக்டர்கள், 17 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 62 போலீசாருக்கும், போலீஸ் அலுவலக பணியாளர்கள் 2 பேருக்கும் சேர்த்து 64 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பணிக்காலத்தில் மரணமடைந்த 8 போலீசாரின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை, வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் சார்பில் மொத்தம் 114 பேருக்கு ரூ.27 லட்சத்து 12ஆயிரத்து 529 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜித், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமபிரதீபன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா தேசியக்கொடியேற்றினார். தாலுகா வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கண்ணன் தலைமையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அனந்தராமன் தேசியக்கொடியேற்றினார். சிவகங்கை நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் பாண்டியராஜன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலெட்சுமி தேசியக்கொடியேற்றினார். சிவகங்கை அருகே உள்ள வீரவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை வியாகுலவிஜயா தேசியக்கொடியேற்றினார். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையாளர் காமராஜ் தேசியக்கொடியேற்றினார். விழாவில் ஆணையாளர் ஜோசப்அருள்ராஜ், மேலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூர் காந்தி சிலை அருகே முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேசியக்கொடியேற்றினார். விழாவில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், நகர் தலைவர் திருஞானசம்பந்தம், வட்டார தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் கிருஷ்ணகுமார் கொடியேற்றினார். விழாவில் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கொடியேற்றினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் அமலநாதன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். விழாவில் வக்கீல் சேதுபாண்டியன், குணாதாசன், சந்தியாகுஅம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீசரஸ்வதி விகாஸ் வித்யாலயா பள்ளியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் கொடியேற்றினார். விழாவில் பள்ளி தாளாளர் சேகர், முதல்வர் சுசீல்குமார், செயலாளர்கள் வீரபாண்டி, முருகேசன் கலந்து கொண்டனர். மாங்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் அலெக்சாண்டர் கொடியேற்றினார். காளையார்கோவில் செயிண்ட் ஜோசப் பள்ளியில் முதல்வர் சோமஜெயந்தி தலைமையில் பள்ளி தாளாளர் ஜான்சன் கொடியேற்றினார்.

காளையார்கோவில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் கேப்டன் அருள்ராஜ் கொடியேற்றினார். இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு மீனாள் கொடியேற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் கண்ணதாசன் கொடியேற்றினார். இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராஜாராம் கொடியேற்றினார். இளையான்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் முகமதுஇல்யாட் கொடியேற்றினார். டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் தொழில் அதிபர் அஜ்மல்கான் கொடியேற்றினார்.

திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியில் பள்ளி முதல்வர் ரூபன் தலைமையில் மாணவர் பள்ளி தலைவர் ஜெப்ரிசாம்சன் தேசியக்கொடியேற்றினார். விழாவில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர் அமிர்பாதுஷா, சங்க தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளி, ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது.

திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் கொடியேற்றினார். அல்அமீர் கல்வியியல் கல்லூரியில் அதன் செயலாளர் சுலைமான்பாதுஷா கொடியேற்றி வைத்தார்.

திருப்பத்தூர் அருகே கோவில்பட்டி குளோபல் பள்ளியில் பள்ளி தாளாளர் காந்தி கொடியேற்றினார். விழாவில் பள்ளி இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் பள்ளி, சோலுடையான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி, ஆலம்பட்டி அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது.

மேலும் செய்திகள்