இந்தியாவில் ஓராண்டில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சியில்லாமல் வளர்கின்றன - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்

இந்தியாவில் ஓராண்டில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சியில்லாமல் வளர்கின்றன என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2018-08-15 23:45 GMT

காரைக்குடி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எழுதிய வாய்மையே வெல்லும் என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் சமூகம், பொருளாதாரம் மற்றும் தேசத்தின் நிகழ்வுகள் குறித்த கருத்தரங்கு காரைக்குடியில் நடந்தது. கவிஞர் கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் நடந்த கருத்தரங்கில் மன்ற நிறுவனர் அரு.நாகப்பன் வரவேற்றார். கவிஞர் இலக்கியா நடராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சென்னை கிறிஸ்துவ கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ராஜகோபாலன் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். விழாவில் ப.சிதம்பரம் பேசும்போது கூறியதாவது:–

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு ஈடாக ஒரு பெரிய சவாலை இந்தியா சந்தித்தது இல்லை. கடந்த 2008–ல் உலகில் பெரிய பொருளாதார சோதனை ஏற்பட்ட போது பெரும்பாலான வங்கிகள் சீர்குலைந்து மூடப்பட்டது. ஆனால் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் ஒரு வங்கிக்கூட மூடப்படவில்லை. அப்போது உலக பொருளாதார சோதனையில் ஏற்படாத சவால் இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 15 கோடி மக்கள் அன்றாடக் கூலிகளாக உள்ளனர். அவர்களைச் சார்ந்து இருக்கும் குடும்பத்தார்கள் 45 கோடி பேர். இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் இவர்கள் 3 மாத காலம் வேலையின்றியும், உண்ண உணவும் இல்லாமலும் தவித்தனர்.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு என்றனர். ஆனால் இத்திட்டம் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக்கொள்ள மத்திய அரசு வழிவகுத்துக் கொடுத்த திட்டமாக மாறிவிட்டது. ஒரு அரசு நல்லவை செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. தீயவை மட்டும் செய்யக்கூடாது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு தீமை என்றால் ஆதார் மற்றொரு தீமையாகும்.

இதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். இந்தியாவில் ஆண்டு ஒன்றிக்கு 1½ கோடி குழந்தைகள் பிறக்கின்றது. இதில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சி இல்லாத குழந்தைகளாக வளர்கிறது. இவர்களால் எப்படி முழுமையான சக்தியை வெளிப்படுத்த முடியும். முழுமையான அறிவுத்திறனை எப்படி வெளிப்படுத்த முடியும். பின்னர் எப்படி இந்தியா வளமான நாடாக மாறமுடியும்.

ஒரு நகரில் ஆய்வு மேற்கொண்டபோது 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததைவிட தற்போது மருத்துவ வசதி முன்னேறி இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு 58 சதவீதம் பேர் இல்லை என பதில் அளித்துள்ளனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் இல்லை என்று பதிலளித்துள்ளனர். அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் இல்லை என்று பதிலளித்துள்ளனர். வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு 63 சதவீதம் பேர் இல்லை என்று கூறியுள்ளனர்.

மக்களின் இந்த பதிலால் நமது ஜனநாயகம் முறையாக செயல்படவில்லை என்று தோன்றுகிறது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையினை தவறாமல் முறையாக செய்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. இனிமேலாவது கவனமாக ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்