பொள்ளாச்சி அருகே பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பு, அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பொள்ளாச்சி அருகே எஸ்.மலையாண்டிபட்டிணம், நல்லாம்பள்ளியில் கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து அதிகாரிகள் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.;
பொள்ளாச்சி,
சுதந்திர தினத்தையொட்டி கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.மலையாண்டிபட்டிணத்தில் கிராம சேவை மைய கட்டிடத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் சாக்கடை கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். ஆனால் அதற்கு அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோன்று நல்லாம்பள்ளியிலும் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதுகுறித்து எஸ்.மலையாண்டிபட்டிணம் பொதுமக்கள் கூறியதாவது:–
ஊராட்சி வரவு–செலவு கணக்குகள், சாக்கடை கால்வாய் தூர்வாருதல், மயானம் சுத்தப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளோம். இதுவரைக்கும் எங்களிடம் வந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை தீர்க்கவில்லை. இதுகுறித்து சப்–கலெக்டருக்கு புகார் தெரிவித்து உள்ளோம். கிராம சபை கூட்டத்தை நடத்த விட மாட்டோம். மீண்டும் ஒரு தேதியில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதுகுறித்து நாளை (இன்று) சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:–
கடந்த கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக கிராமசபை கூட்டம் நடத்த ஆட்சேபனை தெரிவித்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி எஸ்.மலையாண்டிபட்டிணம், நல்லாம்பள்ளி கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.