அகரமேல் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
அகரமேல் ஊராட்சியில் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
பூந்தமல்லி,
சுதந்திர தினத்தையொட்டி பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அந்த பகுதியில் உள்ள 89 சென்ட் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது:–
இது தொடர்பாக கடந்த ஜனவரி மற்றும் மே மாதம் நடந்த கிராம சபை கூட்டங்களை புறக்கணித்தோம். ஆனால் அந்த கிராம சபை கூட்டங்களை நடந்தது போல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னீர்குப்பம்
இதேபோல் சென்னீர்குப்பம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் உறுஞ்சுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனால் அதனை தடுக்க வேண்டும். சிமெண்டு கலவை ஏற்றிச் செல்லும் லாரிகளால் தூசிகள் பறந்து பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது என்று கூறி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
மானாமதி
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் முறையான தகவல் தெரிவிக்காததால் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், தனி அலுவலருமான முரளி, துணை தாசில்தார் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை ஏற்காத பொதுமக்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கான மறுதேதி முறையாக அறிவிக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.