சுதந்திர தின விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 85 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

திருவாரூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2018-08-15 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 72-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் 11 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்ததற்காக 15 போலீசாருக்கும், 81 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 85 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேப்பத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடமும், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், பூந்தோட்டம் லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடமும், குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் 4-வது இடமும் பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, உதவி கலெக்டர்கள் முருகதாஸ், பத்மாவதி, அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் உமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் குமார், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துணை இருதயராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்