கொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி

சிறுத்தைப்புலி குட்டி ஒன்று வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-08-14 23:36 GMT
நாசிக்,

நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் லகாத்புரி தாலுகா தாமன்காவ் பகுதியை சேர்ந்தவர் மனி‌ஷா ஜாதவ். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மனி‌ஷா ஜாதவ் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மனி‌ஷா ஜாதவ் எழுந்தபோது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. கொசு வலைக்குள் குழந்தைகளுடன் சிறுத்தைப்புலி குட்டி ஒன்று படுத்து தூங்கிக்கொண்டிருப்பதை கண்ட அவர் நிலைகுலைந்து போனார்.

இரவில் தான் தூங்கியதும் சிறுத்தைப்புலி குட்டி வீட்டிற்குள் நுழைந்து கொசுவலைக்குள் சென்று குழந்தைகளுடன் படுத்துக்கொண்டதை உணர்ந்தார்.

அந்த சிறுத்தைப்புலி குட்டியால் தனது பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர், பொறுமையாக கொசுவலையை விலக்கிவிட்டு 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

பின்னர் சிறுத்தைப்புலி குட்டி வீட்டிற்குள் புகுந்தது குறித்து கிராம மக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தைப்புலி குட்டியை பிடித்து சென்றனர்.

பிடிபட்ட சிறுத்தைப்புலி குட்டி பிறந்து 3 மாதமே இருக்கும் என்று தெரியவந்தது. அதனை வனப்பகுதியில் விட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்