இன்று சுதந்திர தினவிழா மந்திராலயாவில் முதல்-மந்திரி பட்னாவிஸ் கொடி ஏற்றுகிறார்

மராட்டிய அரசு சார்பில் மந்திராலயாவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேசியக்கொடி ஏற்றுகிறார்.பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;

Update: 2018-08-14 23:33 GMT
மும்பை,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மராட்டிய மாநில அரசு சார்பில் தலைமை செயலகமான நரிமன்பாயிண்டில் உள்ள மந்திராலயாவில் சுதந்திர தினவிழா நடக்கிறது.

இதில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

விழாவில் மாநில மந்திரிகள், அரசுத்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மும்பை நகர போலீசார், அதிவிரைவு படையினர் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு படையினர், மாநில ரிசர்வ் படையினர் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்தேரி சாகர் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம், சாந்தாகுருசில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல பல்வேறு ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் குவியும் இடங்கள், பொதுமக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்