கடல் உள்வாங்காததால் 7 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை கடல் உள்வாங்காததால் 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலமும் மூழ்கியதால் பொதுமக்கள் படகில் சென்று வருகிறார்கள்.

Update: 2018-08-14 23:08 GMT
சிதம்பரம், 


கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு, மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரியின் கடைமடை பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணைக்கு தண்ணீர் வந்தது. கீழணையில் இருந்து நேற்று அதிகாலையில் வினாடிக்கு 2200 கன அடி நீர் வீராணம் ஏரிக்கும், உபரிநீராக வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.

இதனால் கொள்ளிட ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் வங்கக்கடல் காவிரி நீரை உள்வாங்கவில்லை. இதனால் காவிரிநீர் எதிர்த்து, அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உட்புகுந்ததால் பெராம்பட்டுக்கும், திட்டுகாட்டூருக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்பாதையை வெள்ளம் அடித்துச்சென்றது.

கீழகுண்டலபாடி, திட்டுகாட்டூர், ஜெயங்கொண்டபட்டினம், நடுத்திட்டு, வேளக்குடி, மடத்தான்தோப்பு, பெராம்பட்டு ஆகிய 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கரையோர பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது.
குறிப்பாக கீழகுண்டலபாடி, திட்டுகாட்டூர், ஜெயங்கொண்டபட்டினம், நடுத்திட்டு ஆகிய 4 கிராமங்களை சுற்றி நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதி தீவுபோல் காட்சி அளித்தது. கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவர்கள் தவித்தனர். சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்ல முடியாமல் கிராம மக்களும் கடும் அவதி அடைந்தனர்.

இதையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து படகு மூலம் பழைய கொள்ளிடம் ஆற்றை கடந்து வேளக்குடிக்கு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக மீனவர்களின் உதவியை அவர்கள் நாடினர். அதன்படி மீனவர்கள் 2 படகுகளை கொண்டு வந்தனர். முதற்கட்டமாக அந்த படகுகளில் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்று, பெராம்பட்டில் இறக்கி விட்டனர். அதன்பிறகு வேலைக்கு செல்லக்கூடியவர்கள் படகுகள் மூலம் பழைய கொள்ளிடம் ஆற்றை கடந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அமுதா, தீயணைப்பு வீரர்கள் பெராம்பட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் படகு மூலமாக திட்டுகாட்டூருக்கு சென்று அங்குள்ள பகுதியை பார்வையிட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் திட்டுகாட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள், பெராம்பட்டுக்கு சென்றுவர உதவி செய்தனர். இதேபோல் மாலையிலும் பெராம்பட்டில் இருந்து திட்டுகாட்டூர் பகுதிக்கு செல்ல படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திட்டுகாட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் இரவு 7 மணிக்கு மேல் யாரும் வெளியே வரவேண்டாம் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். 7 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் வடிய 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே தண்ணீர் வடியும் வரையில் பெராம்பட்டு- திட்டுகாட்டூர் இடையே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்ல போதிய படகு வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்