திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் மர்ம சாவு
பண்ருட்டியில் திருமணமான 1½ ஆண்டில் ரத்தக்காயங்களுடன் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி வி.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் வினோத்குமார்(வயது 28). எலக்ட்ரீசியன். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் சூர்யா(21). பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், வினோத்குமாருக்கும் கடந்த 30.1.2017 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது சூர்யாவின் பெற்றோர், நகைகள், சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர். திருமணமாகி 1½ ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை என்று காரணம் கூறி வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் சூர்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு சூர்யாவை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா, கல்குணத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இது தொடர்பாக சூர்யாவின் அண்ணன் சிவக்குமார், கடந்த 7-ந் தேதி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், வரதட்சணை கேட்டு தனது தங்கையை வினோத்குமார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சூர்யாவை சமாதானப்படுத்தி வினோத்குமாருடன் அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் வளையலணி விழா நடந்தது. அதில் சூர்யா கலந்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த சூர்யாவுக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
ரத்தக்காயங்களுடன் பிணம்
இந்த நிலையில் நேற்று காலையில் வினோத்குமாரின் வீட்டில் சூர்யா பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் சூர்யாவின் தாய், அண்ணன் சிவக்குமார் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அங்கு சூர்யாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இதனிடைய தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசாரும் அங்கு வந்தனர். சூர்யாவின் உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசில் சூர்யாவின் அண்ணன் சிவக்குமார் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், திருமணத்தின்போது எனது தங்கைக்கு 29 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தோம். இருப்பினும் கூடுதல் வரதட்சணை கேட்டு சூர்யாவை, அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். இதையெல்லாம் சகித்துக்கொண்டு, வினோத்குமாருடன் எனது தங்கை வாழ்ந்து வந்தார்.
இரவு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த எனது தங்கை, நேற்று காலையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் உள்ளன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சூர்யாவின் உறவினர்கள், பண்ருட்டி அரசு மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டனர். மதியம் 2.30 மணியளவில் அவர்கள் திடீரென பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், வினோத்குமாரும், அவரது பெற்றோரும் சூர்யாவை அடித்து கொலை செய்துள்ளனர். எனவே சந்தேக மரணம் என்று போடப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்றி வினோத்குமாரையும், அவரது பெற்றோரையும் கைது செய்ய வேண்டும். சூர்யாவின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், புகாரின் பேரில் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் திருமணமாகி 1½ ஆண்டிலேயே சூர்யா இறந்து இருப்பதால், இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அவர் முழுமையாக விசாரணை நடத்துவார். பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல் ஒப்படைக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.