திறனுக்கேற்ற கூலி உத்தரவை அமல்படுத்தக்கோரி பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திறனுக்கேற்ற கூலி உத்தரவை அமல்படுத்தக்கோரி பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-08-14 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்ட பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் வெங்கடபதி, எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் இ.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், திறனுக்கேற்ற கூலி உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்பும்போது பயணப்படி வழங்க நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். மாதந்தோறும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பள சிலிப் வழங்குவதை கட்டாயப்படுத்த வேண்டும். அடையாள அட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேவையான உபகரணங்களை முறையாக வழங்கப்படுவதை கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பகுதி நேர ஊழியர்களுக்கும் வங்கி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கை செய்யக்கூடாது. தேவைக்கேற்ப புதிய நியமனங்களை ஏற்படுத்த வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.செல்வம், எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட உதவி செயலாளர் ஹரிகரன் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், திறனுக்கேற்ற கூலி என மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தும் இன்னமும் அமலாகவில்லை. மாதா மாதம் சம்பளம் குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தும் நிதி ஆதாரங்களை காரணம் காட்டி காலதாமதம் ஆவது தொடர் கதையாகி விட்டது. ஊரக பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களை தேவைக்கேற்ப ஊர் ஊராக பணிக்கு அனுப்பினாலும், பஸ் கட்டணம் கூட வழங்க மறுக்கிறார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்