ஏரி, குளங்களை தூர்வாராததால் கடலுக்கு செல்கிறது: காவிரி நீர் வீணாவதற்கு தமிழக அரசே பொறுப்பு எச்.ராஜா பேட்டி

ஏரி, குளங்களை தூர்வாராததால் காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாவதற்கு தமிழக அரசே பொறுப்பு என்று எச்.ராஜா கூறினார்.

Update: 2018-08-14 23:00 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தற்போது கர்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக அங்கிருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் மழைநீர் காவிரியில் தமிழகத்திற்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் வயல்களிலும், கடலிலும் சென்று விடுகிறது. இதனால் எவ்வித பயனும் இல்லை. அந்த நீரை சேமிப்பதற்கு தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி இருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். அவற்றை தமிழக அரசு தூர் வாராத காரணத்தினால் இந்த தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது. இதற்கு தமிழக அரசே பொறுப்பு.

50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தண்ணீர் கொள்கை என்பது இல்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம், சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே மத்திய அரசின் சாதனைகளை நகர, கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் சொல்லி கட்சியை பலப்படுத்துவதே தற்போது பா.ஜ.க.வின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பெரும்பான்மையான தி.மு.க.வினர் என்பக்கம் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறியது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, அது அவர்கள் உள்கட்சி பிரச்சினை என்றும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியதற்கு தமிழக அரசு கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் குதித்து இருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப்பற்றி கேட்டபோது, அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா, என்று கூறினார். 

மேலும் செய்திகள்