அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்

அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

Update: 2018-08-14 23:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 136 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நடுநிலை கல்வியை முடிக்கும் மாணவர்கள் உயர்நிலை கல்வி படிக்க இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள மணப்பாறை அல்லது அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, கே.பெரியபட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அருகில் உள்ள ஊரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியானது பற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி அருகே மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்றால் அதற்கான தொகையை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்றனர். அதற்கு பொதுமக்கள், நாங்கள் 2014-ம் ஆண்டே பணம் செலுத்துகிறோம் என்று கூறிய போது பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின்னர் செலுத்தி கொள்ளுங்கள் என்று கூறியதால் தான் நாங்கள் பணம் கட்டவில்லை. ஆகவே, பள்ளியை தரம் உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள், உங்கள் கோரிக்கை குறித்து கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பள்ளியை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்