காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2018-08-14 23:00 GMT
திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று குறைவாக இருந்தது. அதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து விட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகத்தில் பெய்து வரும் கன மழையினால் நேற்று மாலை நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டதால் இந்த உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் மாயனூர் கதவணை வழியாக திருச்சி முக்கொம்பு மேலணையை அடைகிறது. இங்கிருந்து காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளிலும் தண்ணீர் பகிர்ந்து திறந்து விடப்படுகிறது.

திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உத்தமர் சீலி, திருவளர்ச்சோலை பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் வாழைத்தோட்டம் தண்ணீரில் மூழ்கியது. காவிரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் தரைப்பாலம் வழியாக கொள்ளிடத்தை அடைந்தது. இதனால் திருச்சி- கல்லணை சாலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முக்கொம்பில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இது காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியுமாக திறந்து விடப்பட்டது. ஆனால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருப்பதால் அந்த உபரி நீர் அனைத்தும் அப்படியே முக்கொம்பு மேலணைக்கு தான் வந்து சேரும். முக்கொம்பில் இருந்து இந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் நேரத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்