கூடங்குளத்தில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை சாவு
கூடங்குளத்தில் மினிலாரி டிப்பரை தூக்கியபோது மின்கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடங்குளம்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள புல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரா. இவருடைய மகன் அய்யாக்குட்டி (வயது 35). மினிலாரி டிரைவர்.
நேற்று அய்யாக்குட்டி மினிலாரியில் மண்ணை ஏற்றி வந்து சாலையோர பள்ளத்தில் கொட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருடன் கிளனரான மகேந்திரபுரத்தை சேர்ந்த முருகபெருமாள் மகன் முத்துக்குட்டியும் (20) பணியில் இருந்தார்.
மாலை 4 மணியளவில் அய்யாக்குட்டி மினிலாரியில் ஏற்றி வந்த மண்ணை கொட்டுவதற்காக, இருக்கையில் அமர்ந்தபடி டிப்பரை மேலே தூக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் மேலே சென்ற மின்கம்பியில் உரசியது.
இதனால் அய்யாக்குட்டி மீது மின்சாரம் தாக்கியது. மேலும் அவருக்கு அருகில் அமர்ந்து இருந்த கிளனர் முத்துக்குட்டியையும் (20) மின்சாரம் தாக்கியது.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அய்யாக்குட்டி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்துக்குட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அய்யாக்குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலியான அய்யாக்குட்டிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் அவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.