நாமக்கல்லில் பட்டப்பகலில் துணிகரம்: வக்கீல் மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு

நாமக்கல்லில் பட்டப்பகலில் வக்கீல் மனைவியிடம் 9 பவுன் நகையை பறித்துவிட்டு 2 வாலிபர்கள் தப்பி ஓடினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான அவர்களின் உருவத்தை கொண்டு, அந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-08-14 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் சந்தைபேட்டை புதூர் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபதி. வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்விழி (வயது 32). இவர்களின் மகன் இன்பா (7). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன் இன்பாவை தினசரி அவனது தாயார் மலர்விழி பரமத்தி சாலைக்கு வந்து காலையில் பள்ளி பஸ்சில் ஏற்றி விட்டு செல்வார்.

இதேபோல் மாலையில் பஸ்சில் இருந்து இறக்கி, வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று மாலை 4 மணி அளவில் இன்பாவை அழைத்துக்கொண்டு மலர்விழி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென மலர்விழி அணிந்து இருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார். இதனால் நிலை தடுமாறிய மலர்விழி திருடன், திருடன் என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவருவதற்குள் மர்ம ஆசாமிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடினர். இருப்பினும் அவர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை.

இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரின் உருவமும் அதில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் எண்ணும் தெரிந்தது. அதை வைத்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர நகைபறிப்பு சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்