கும்மிடிப்பூண்டி பஜாரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி பஜாரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜாரில் தபால் அலுவலகம், அரசு பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட குழு நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு திடீரென திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி செல்வகுமார், கிராம நிர்வாக அதிகாரி சர்மா, கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கனவே 2 முறை
இது குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் பேசிய வட்டவழங்கல் அதிகாரி செல்வகுமார், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதை முன்பே அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே 2 முறை அந்த பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.