பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட நகை-பணம் மீட்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட நகை-பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2018-08-14 23:15 GMT
சென்னை, 

சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 35). இவர் தென்காசிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டார். பொதிகை எக்ஸ்பிரஸ் நேற்று காலை 5.30 மணியளவில் தாம்பரத்துக்கு வந்தது.

தாம்பரத்தில் குடும்பத்துடன் இறங்கிய பின்னர், அங்கிருந்து விஸ்வநாதன் மின்சார ரெயிலில் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அப்போது தான் தனது மனைவி வைத்திருந்த கைப்பை பொதிகை எக்ஸ்பிரசில் தவறவிட்டதை அறிந்தார். உடனடியாக பரங்கிமலை ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசாரிடம் இதுகுறித்து புகார் செய்தார். அந்த புகாரில், 15 பவுன் நகைகள், ரூ.6,760, செல்போன், ஆதார் அட்டை உள்ளிட்டவை இருந்த கைப்பையை மீட்டுத்தரும்படி அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எழும்பூர் ஆர்.பி.எப். போலீசாருக்கு இது குறித்து தகவல் தரப்பட்டது. இதையடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்த பொதிகை எக்ஸ்பிரசில் குறிப்பிட்ட எஸ்-2 பெட்டிக்கு சென்று, போலீசார் சோதனையிட்டனர். அங்கு கிடந்த கைப்பையை மீட்டனர். நகை-பணத்துடன் மீட்கப்பட்ட அந்த கைப்பையை விஸ்வநாதனிடம், எழும்பூர் ஆர்.பி.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்