ஆழ்கடலில் கப்பல் மோதி பலியான குமரி மீனவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் கேப்டன் உள்பட 3 பேர் கைது

ஆழ்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் பலியான குமரி மீனவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், கப்பல் கேப்டன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-14 22:15 GMT

கருங்கல்,

குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்தவர் ஏசுபாலன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், ஏசுபாலன் உள்பட 14 மீனவர்கள் கடந்த 6–ந் தேதி கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. இதில் 2 பேர் உயிர் தப்பினர். மீதமுள்ள 12 பேரும் கடலில் மூழ்கினர்.

இவர்களில் ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன் உள்பட 4 பேரின் உடல் ஏற்கனவே மீட்கப்பட்டது. பிற மீனவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் உடல் கடந்த 12– ந் தேதி இரவு மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடல் நேற்று சொந்த ஊரான ராமன்துறைக்கு கொண்டு வரப்பட்டது. உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே விசைப்படகு மீது மோதிய தேஸ் சத்தி என்ற சரக்கு கப்பலை கேரள போலீசார் தேடி வந்தனர். அந்த கப்பல் மங்கலாபுரத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கப்பல் கேப்டன் அலுவாலியா மற்றும் முதன்மை அதிகாரிகள் நந்தகிசோர், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து கொச்சிக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலில் மூழ்கிய அனைத்து மீனவர்களையும் மீட்கக்கோரி ராமன்துறையில் கடந்த 10–ந் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 5–வது நாளாக நீடித்தது.

மேலும் செய்திகள்