ஊட்டியில் திடீர் மண் சரிவு: கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

ஊட்டியில் திடீர் மண் சரிவால் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

Update: 2018-08-14 22:15 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாபுஷாலைன் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர்கள் குடோன் உள்ளது. அந்த குடோனுக்கு கொண்டு வருவதற்காக கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிய பாரத்தோடு ஒரு லாரி அந்த பகுதியில் நின்றது. அந்த லாரியில் 280 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன.

இந்த நிலையில் நேற்று காலை லாரியில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை இறக்கி வைப்பதற்காக லாரியை நஞ்சநாட்டை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் இயக்க முயன்றார். ஊட்டியில் பெய்த தொடர் மழையால் மண் ஈரப்பதமாக இருந்தது. அப்போது திடீரென லாரியின் பின்பகுதி உள்ள இடத்தில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது.

இதனை சுதாரித்து கொண்ட டிரைவர் ராஜேந்திரன் லாரியை விட்டு கீழே இறங்கினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட மண் சரிவால் லாரி சாலைகளில் உருண்டு கவிழ்ந்தது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் மற்றொரு புறம் இருந்த சாலையில் அங்கும், இங்கும் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் லாரி சேதமடைந்தது. கியாஸ் சிலிண்டர்கள் கசியாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலை வீரர்கள், ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலையில் கிடந்த கியாஸ் சிலிண்டர்களை எடுத்து தனித்தனியாக அடுக்கி வைத்தனர். அதன் பின்னர் மற்றொரு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் லாரியை அங்கிருந்து மீட்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து டிரைவர் ராஜேந்திரன் கூறும்போது, சாலையோரத்தில் மண் சரிவை ஏற்படுவதை அறிந்து நான் லாரியில் இருந்து கீழே இறங்கி விட்டதால் உயிர் பிழைத்தேன், என்றார். தொடர் மழை பெய்ததாலும், லாரியின் பாரம் தாங்காமலும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்