யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளை பாதுகாக்க கோரி மசினகுடியில் 2–வது நாளாக முழு அடைப்பு போராட்டம்

யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளை பாதுகாக்க கோரி மசினகுடியில் 2–வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

Update: 2018-08-14 22:45 GMT

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டு இருந்த 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் 12 தனியார் விடுதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 10 விடுதிகள், கடநாடு, உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட 2 தனியார் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 தனியார் விடுதிகள் என 27 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்தவுடன் அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை தவிர மீதமுள்ள கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) அந்த விடுதிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.

இதற்கிடையே வாழைத்தோட்டம், பொக்காபுரம் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், பொது கட்டிடங்களும் யானைகள் வழித்தடத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. அடுத்த நடவடிக்கையாக அந்த கட்டிடங்களையும் காலி செய்ய கோர்ட்டு வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பலதலை முறைகளாக வாழ்ந்து வரும் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்துடன் உள்ளனர்.

அது மட்டுமின்றி தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மசினகுடி மற்றும் அதன் சுற்று வட்டாரா பகுதி கொண்டு வரப்பட்டு உள்ளதால் மசினகுடி பகுதி மக்கள் கட்டி உள்ள குடியிருப்புகள் அனைத்தும் விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மசினகுடி பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள யானைகள் வழித்தடத்தை மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2006 வன உரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 3 நாட்கள் மசினகுடி பகுதியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. நேற்று 2–வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் மசினகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 100–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டு இருந்தன. தனியார் ஜீப்களும் இயங்கவில்லை. பெரும்பாலான குழுந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. இதனால் மசினகுடி பகுதி செறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்