தென்மேற்கு பருவமழை தீவிரம்: நீலகிரியில் 7 அணைகளில் தண்ணீர் திறப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் 7 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அப்பர்பவானி, அவலாஞ்சி, முக்குருத்தி, குந்தா, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, கிளன்மார்கன், மரவகண்டி, மாயார், கெத்தை, காமராஜ் சாகர் ஆகிய 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் இந்த அணைகள் மிகவும் குறைந்த அளவில் தண்ணீருடன் காணப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் வழக்கத்தை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதனால் அனைத்து அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து கடல்போல் காட்சி அளித்து வருகிறது. இது மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ரம்மியமாக உள்ளது. அதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பைக்காரா அணை திறக்கப்பட்டு, அதில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, நேற்று மதியம் முதல் 3 மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 120 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி அணை, 78 அடி உயரம் கொண்ட அப்பர்பவானி அணை நிரம்பியதை அடுத்து திறக்கப்பட்டது. அவலாஞ்சி அணையில் இருந்து வினாடிக்கு 450 கனஅடி தண்ணீரும், அப்பர்பவானி அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
அவலாஞ்சியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குந்தா அணைக்கு வந்ததால், குந்தா அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அப்பர் பவானி அணையில் இருந்து வினாடிக்கு 3360 கன அடி தண்ணீரும், அவலாஞ்சி அணையில் இருந்து வினாடிக்கு 4300 கன அடி தண்ணீரும், குந்தா அணையில் இருந்து 4500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
மசினகுடியில் உள்ள மரவகண்டி அணையின் நீர்மட்டம் 32 அடியை எட்டியது. இதனை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, மாயார் அணைக்கு திருப்பி விடப்பட்டது. இதனிடையே 84 அடி உயரம் கொண்ட முக்குருத்தி அணை நேற்று மதியம் நிரம்பியதால், அந்த அணையும் திறக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் கிளன்மார்கன் அணை நிரம்பியதை அடுத்து, சிங்காரா நீர்மின் நிலையத்தின் வழியாக மின்சாரம் உற்பத்தி செய்ய அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. இதனால் சிங்காராவில் மின்நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதை வழியாக மசினகுடிக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக மசினகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனிடையே நேற்று மாலை கிளன்மார்கன் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 500 கனஅடிக்கு மேல் இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டு, அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தெப்பக்காடு, மசினகுடி, மாயார் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கய் யாரும் செல்ல வேண்டாம் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதை தொடர்ந்து, பைக்காரா, அவலாஞ்சி, அப்பர்பவானி, குந்தா, மரவகண்டி, முக்குருத்தி, கிளன்மார்கன் ஆகிய 7 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
அவலாஞ்சி அணை பகுதியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள கோவில் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். குறிப்பாக அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட அணைகளின் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.