விருதுநகரில் போலீஸ் அதிகாரி மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
விருதுநகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகரில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் லட்சுமணன். இவரது மகன் சுவாமிநாதன் (வயது 21). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பாட்டியுடன் இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் தான் இவர் விருதுநகரில் தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகில் உள்ள ரெயில்பாதையில் வந்து நின்றார். அப்போது சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
சுவாமிநாதன் திடீரென்று ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட சுவாமிநாதனின் பேண்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் அவர், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு மனநிலை பிரச்சினை இருந்ததால் என்னால் வாழ இயலாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னியுங்கள் என எழுதி வைத்துஇருந்தார்.
போலீசார் சுவாமிநாதன் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பரிசோதனை முடிந்த பின்னர் சொந்த ஊரான அமராவதிபுதூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுவாமிநாதன் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இது பற்றி ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் அதிகாரி லட்சுமணன் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆடிப்பூரத்தேரோட்ட பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு விருதுநகருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் வந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் அவர் காயமின்றி தப்பியது குறிப்பிடத்தக்கது.