3 மாவட்டங்களை இணைக்கும் தோமையார்புரம் தேனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், தமிழக அரசுக்கு கோரிக்கை

3 மாவட்டங்களை இணைக்கும் தோமையார்புரம் தேனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2018-08-14 22:30 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி அருகே உள்ளது தோமையார்புரம். இந்த கிராமத்தின் வழியாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் விருசுழி, தேனாறு, பாம்பாறு, கூரை ஆறு என பிரிந்து கடலில் கலக்கிறது. மேலும் தோமையார்புரம் ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லையாகவும், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதற்கு நுழைவு வாயிலாகவும் இருந்து வருகிறது.

இதனால் இந்த கிராமத்தில் ஆற்றின் மேல் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த 3 மாவட்ட மக்கள் தங்களின் தொழில், உறவுமுறை, வியாபாரம், தெய்வ வழிபாடு போன்ற பல்வேறு வகையான செயல்களுக்கும் தோமையார்புரம் தேனாற்று பாலத்தின் வழியாக தான் சென்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் பெருமளவில் தண்ணீர் வந்தபோது இப்பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் தூம்புகள் கொண்ட தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இதுவும் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. பெருமழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் இந்த பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு இந்த பாலத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்து உள்ள தோமையார்புரம் தேனாற்று பாலத்தை அகற்றி விட்டு விருசுழி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என்று 3 மாவட்ட மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதவத்தூர் முத்தமிழரசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆண்டாவூரணி ஜேம்ஸ், பாகனூர் வெள்ளைச்சாமி, கட்டவிளாகம் இளைஞர் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுவும் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்