கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம்: ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ரேஷன்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தேவகோட்டை,
தேவகோட்டையில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் மாயாண்டி, திருஞானம் மற்றும் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட கடை அடைப்பு மற்றும் பேரணி மூலமாக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அதில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை வரவேற்கப்படுகிறது.
ஆனால் அதுகுறித்து அரசு இன்று வரை எந்தவித உத்தரவும் வெளியிடவில்லை. எனவே மீண்டும் எங்களை முதல்–அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 7–ந் தேதி அன்று திருவாரூரில் நடக்கும் ஆயத்த மாநாட்டில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்பது உள்பட மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மறைந்த முன்னாள் அமைச்சர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் தினகரன் நன்றி கூறினார்.