ஹெல்மெட் கட்டாய சட்ட விவகாரம்: தன்னிச்சையாக உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ராயணசாமி எதிர்ப்பு

ஹெல்மெட் அணிவது தொடர்பான கட்டாய சட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-08-14 23:45 GMT

புதுச்சேரி,

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார். குறிப்பாக அரசு ஊழியர்கள், போலீசார் ஹெல்மெட் கட்டாயமாக அணியவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:–

ஹெல்மெட் அணிவது தொடர்பாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்பு ஹெல்மெட் அணிவது தொடர்பான பிரச்சினை சட்டமன்றத்திலும் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய எம்.எல்.ஏ.க்கள், அரசு இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பின் ஹெல்மெட் அணிவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதன்படி காவல்துறையினர் தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம், ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். புதுவை மாநிலத்தில் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு பலியாகின்றனர். அதை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கவர்னர், ஹெல்மெட்டை கட்டாயம் அணியவேண்டும் என்பதை அமல்படுத்த காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் பார்த்தேன். கவர்னர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ துறைத்தலைவர்களுக்கு நேரடியாக உத்தரவு போடமுடியாது. அவர் தனது கருத்தை சொல்லலாம்.

அந்த கருத்து தொடர்பாக துறை தலைவர் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துபேசி அதற்கு தேவையான கோப்புகளை தயாரித்து எங்களுக்கு அனுப்பவேண்டும். அதன்பின் எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை பரிசீலித்து அரசு முடிவு எடுக்கும். தன்னிச்சையாக உத்தரவிட நிர்வாகத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

நாம் சர்வாதிகார ஆட்சியில் இல்லை. எதையும் ஜனநாயக முறைப்படி செய்யவேண்டும். எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதுதொடர்பாக டி.ஜி.பி.யை அழைத்து பேசுவேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்