கரூரில் கரியமாலீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு சிவனடியார்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு பலகை வைத்தனர்

கரூரில் கரியமாலீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது தொடர்பாக சிவனடியார்கள் கூட்டமைப்பினர் அதிகாரிகளுடன் சென்று அது தொடர்பான அறிவிப்பு பலகையை வைத்து விட்டு சென்றனர்.

Update: 2018-08-14 23:00 GMT
கரூர்,

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் நலன் மற்றும் சொத்து குறித்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள் சபையினர் அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று கூட்டாய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் ஜவகர்பஜார் சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகேயுள்ள இடத்தில் முன்பு கரியமாலீஸ்வரர் என்கிற கோவில் இருந்ததும், காலப்போக்கில் இந்த கோவில் எவ்வித சுவடுமின்றி அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதும் சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள் சபையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. மேலும் கரியமாலீஸ்வரர், நாகேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களின் சாமி சிலைகள் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நாகேஸ்வரர் கோவில் இருந்த இடம் பற்றிய தெளிவான தகவல் கிடைக்கப்பெறாததால் அது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கரியமாலீஸ்வரர் கோவில் இடத்தினை மீட்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் கோவிலுக்கு ஒப்படைக்காமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ஆகஸ்டு 12-ந்தேதிக்குள் இதனை கோவிலுக்கு திரும்ப ஒப்படைப்பது பற்றிய அறிவிப்பாணையை அங்கு ஒட்டினர். அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள் சபை செயலாளர் சரவணகுமார் உள்பட சிவனடியார்கள் குழுவினர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராஜாராம், கோவில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவில் இடத்தில் மரக்கட்டைகள் உள்ளிட்டவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அங்குள்ள கோவில் நிலத்தினை யாரும் பயன்படுத்தாத வகையில் அதிகாரிகள் கதவை இழுத்து பூட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் 67 சென்ட் நிலமானது கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது ஆகும். இந்த நிலத்தில் யாரும் அத்துமீறி பிரவேசிக்க கூடாது என்கிற வாசகம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அந்த இடத்தில் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த கோவில் நிலம் பலகோடி ரூபாய் மதிப்புடையது என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள் சபை செயலாளர் சரவணகுமார் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் நகரம் பஞ்சலிங்க திருத்தலம் உள்ள நகர் ஆகும். இதில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், வஞ்சுலீஸ்வரர் கோவில், கோடீஸ்வரர் கோவில் ஆகியவை மட்டுமே தற்போது உள்ளது. அந்த வகையில் தற்போது கரியமாலீஸ்வரர் கோவில் நிலம் மீட்கப்பட்டு அந்த இடத்திலேயே கோவில் கட்ட விரைவில் ஏற்பாடு செய்யப்படும். அதன் தொடர்ச்சியாக நாகேஸ்வரர் கோவிலின் ஆக்கிரமிப்பை கண்டறிந்து அந்த கோவிலை மீண்டும் நிர்மாணிக்க அதிகாரிகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்