கோவிலில் கறி சாப்பாடு கேட்டு அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் விவசாயி கைது

கொரடாச்சேரி அருகே கோவிலில் கறி சாப்பாடு கேட்டு அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-14 22:15 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). இவர் மன்னார்குடியில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கொரடாச்சேரியை அடுத்த பெருமாளகரம் கிராமத்தில் உள்ள செடில் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தனது குடும்பத்துடன் வந்தார். பின்னர் கோவிலில் ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

அப்போது பெருமாளகரத்தை சேர்ந்த பக்கிரிசாமி, சிங்காரவேல் மற்றும் அருகில் உள்ள நாலில் ஒன்று கிராமத்தை சேர்ந்த முருகேஷ் உள்ளிட்ட சிலர் வந்து பூஜை செய்து கொண்டிருந்தவர்களிடம் சென்று எங்களுக்கு கறி சாப்பாடு போடுங்கள் என கேட்டுள்ளனர். இதற்கு பூஜை முடிந்தவுடன் சாப்பாடு போடுவதாக செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பூஜை முடிக்க ஏன் தாமதம் செய்கிறீர்கள்? உடனடியாக எங்களுக்கு கறி சாப்பாடு போடுங்கள் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஷ், பக்கிரிசாமி, சிங்காரவேல் ஆகியோர் செந்தில்குமாரை தாக்கினர். இதில் செந்தில் குமார் காயமடைந்தார். செந்தில்குமாரை காப்பாற்ற சென்ற அவருடைய உறவினர் அறிவழகன் (60) என்பவரையும் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து அறிவழகன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், செந்தில்குமார் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செந்தில்குமார் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியான முருகேசை (45) கைது செய்தனர். பக்கிரிசாமி, சிங்காரவேல் மற்றும் சிலரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்