ரெயில் என்ஜின் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி, போலீஸ்காரர் ரெயிலில் அடிபட்டு சாவு

புனேயில் ரெயில் என்ஜின் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். மற்றொரு சம்பவத்தில் தண்டவாளத்தை கடந்த போலீஸ்காரர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

Update: 2018-08-13 22:53 GMT
புனே,

புனே தெகுரோடு அருகில் உள்ள பாக்டேவாடி ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நின்று கொண்டிருந்த ஒரு ரெயில் என்ஜின் மீது 15 வயது சிறுவன் ஒருவன் ஏறியிருக்கிறான். பின்னர் அவன் பக்கத்து தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரெயிைல செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்த போது, துரதிருஷ்டவசமாக மேலே செல்லும் ஓவர்ெஹட் மின்கம்பி அவன் உடலில் உரசியுள்ளது.

இதில், மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த அவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். விசாரணையில், அவன் புனே சாங்வி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

புனே வானோவ்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் கஜர்மால்(வயது48). இவர் நேற்று முன்தினம் ஹடப்சர் பகுதியில் உள்ள மைதானத்துக்கு செல்வதற்காக அங்குள்ள தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ரெயில் ஒன்று அவர் மீது மோதிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதை ரெயில்வே போலீசார் மறுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்