வாங்காத கடனுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

கடன் பெறாத விவசாயிகள் சிலருக்கு வங்கியில் இருந்து கடன் மீட்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-08-13 22:49 GMT
நாக்பூர்,

நாக்பூர் மாவட்டம் நார்கேத் தாலுகா சின்சார் கிராமத்தை சேர்ந்த 11 விவசாயிகளுக்கு வங்கியில் இருந்து கடன் மீட்பு நோட்டீஸ் வந்திருந்தது. அதில் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அவர்கள் கடன் பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் வங்கியில் கடன் பெறவில்லை என்பதால் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் கெய்க்வாட் என்ற விவசாயி ஒருவர் கூறுகையில், “கடந்த 10 நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்திற்கு ஒரு நோட்டீஸ் வந்திருந்தது. இதில், நாங்கள் வாங்கிய ரூ.50 லட்சம் கடனுக்கான அசலையும், அதற்கான வட்டியையும் செலுத்தவில்லை என்று அதில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் நாங்கள் கடன் ஏதும் பெறவில்லை.

இதேபோல் எங்கள் ஊரை சேர்ந்த மேலும் சிலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

எங்கள் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி அரசின் திட்டத்தில் கடன் பெற்று மோசடி நடந்திருப்பதாக கருதுகிறோம். எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்து உள்ளோம்” என்றார்

மேலும் செய்திகள்