கைதானவர்களிடம் இருந்து மேலும் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைதானவர்களிடம் இருந்து மேலும் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-13 22:26 GMT
மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த வைபவ் ராவுத் (வயது40) என்பவரின் வீடு மற்றும் கடையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் 20 நாட்டு வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். இதுதவிர மடிக்கணினி, 6 ஹார்டுடிஸ்க், 5 பென் டிரைவ், 9 செல்போன்கள் மற்றும் பல சிம் கார்டுகளையும் கைப்பற்றினர்.

விசாரணையில் வைபவ் ராவுத் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வைபவ் ராவுத்தின் கூட்டாளிகளான நாலச்சோப்ராவை சேர்ந்த சரத் கலாஸ்கர், புனேயை சேர்ந்த சுதன்வா கோந்தலேகர்(39) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் போலீசார் நேற்று முன்தினம் புனேயில் உள்ள சுதன்வா கோந்தலேகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 11 நாட்டு துப்பாக்கிகள், ஒரு விசை துப்பாக்கி, 6 துப்பாக்கி மேகசின்கள், கத்திகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடந்து நேற்றும் போலீசார் நாலச்சோப்ராவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 5 நாட்டு துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி உதிரி பாகங்களை கைப்பற்றினர்.

பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு கைதானவர்களிடம் இருந்து தொடர்ந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்