பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் பீதரில் ‘மக்களின் குரல்’ பிரசாரத்தை தொடங்கி வைத்து பேச்சு

பீதரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மக்களின் குரல் என்ற பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து விவாதத்துக்கு தயாரா? என்று பிரதமர் மோடிக்கு அவர் சவால் விடுத்தார்.

Update: 2018-08-13 23:45 GMT
பீதர்,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்தன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தை மிகவும் கடுமையாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுகையிலும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதன் தொடர்ச்சியாக ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடிக்கு தற்போது அவர் சவால் விடுத்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் பீதரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘மக்களின் குரல்’ நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசும்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாம் இருவரும் (ராகுல், மோடி) விவாதம் நடத்துவோம். இந்த ஒப்பந்தம் குறித்து என்னால் மணிக்கணக்கில் பேச முடியும். உங்களால் முடியுமா?

பிரதமர் மோடி, தன்னை நாட்டின் முதன்மை காவலன் என்று கூறி இருந்தார். ஆனால் இந்த காவல்காரன் ஒரு கூட்டாளியாகி இருக்கிறார். வரி செலுத்துவோரின் பணத்தை திருடி, ரபேல் ஒப்பந்தத்தை பெற்றிருக்கும் நண்பருக்கு கொடுத்து வருகிறார். அவர் நாட்டு மக்களுக்கு பிரதமர் அல்ல. மாறாக வெறும் 15 பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர்.

‘பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம்’ என்ற கோஷத்தை பிரதமர் அறிவித்தார். ஆனால் யாரிடம் இருந்து பெண் குழந்தையை காக்க வேண்டும் என்பதை அவர் கூறவில்லை.

ஏனெனில் உத்தரபிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்பில் பா.ஜனதா தலைவர் பிடிபடுகிறார். பீகாரில் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டால், பா.ஜனதா தலைவர்களின் பெயர்கள் அடிபடுவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் இது குறித்து பிரதமர் ஒரு வார்த்தையும் பேசுவது இல்லை.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரபேல் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா அந்த வாய்ப்பை பறித்துவிட்டது. இதனால் கர்நாடக இளைஞர்கள் வேலை யில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முந்தைய ஆட்சியில் ஒரு ரபேல் போர் விமானம் ரூ.565 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய மோடி அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

வேலையில்லாதவர்கள் பக்கோடா விற்குமாறு பிரதமர் கூறுகிறார். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை. பயிர் காப்பீட்டு திட்டம் இல்லை. விவசாய கருவிகளுக்கு மானியம் இல்லை. உங்கள் நிலத்தில் குழி தோண்டி, அதில் குப்பையை கொட்டி கியாஸ் உற்பத்தி செய்து அதை பம்புசெட்டுகளை இயக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பிரதமர் ஆலோசனை கூறுகிறார்.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்