யானை வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளை பாதுகாக்கக்கோரி மசினகுடியில் முழு அடைப்பு போராட்டம்

யானை வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளை பாதுகாக்கக்கோரி மசினகுடியில் பொதுமக்களின் 3 நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

Update: 2018-08-13 23:00 GMT

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட பகுதியில் 100–க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்கி செல்கின்றனர். இதனிடையே அந்த விடுதிகள் விதிமுறை மீறி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்றும், உடனே அவற்றை அகற்ற வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த 2008–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சிங்காரா, ஆச்சக்கரை, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை காலி செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரியில் 300–க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதாக வக்கீல் யானை ராஜேந்திரன் தெரிவித்தார். இதை கேட்டறிந்த நீதிபதிகள், நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதிகள், கட்டிடங்கள் குறித்தும், அவற்றின் தன்மைகள் குறித்தும் அறிக்கை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். அதன்படி அந்த அறிக்கை கடந்த 8–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 39 தனியார் விடுதிகள் குடியிருப்புக்கான அனுமதியை பெற்றுவிட்டு, விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல 77 விவசாய நிலங்கள், 390 குடியிருப்புகள், தனியார் எஸ்டேட்டுகள், ஒரு தனியார் பள்ளி உள்பட 782 கட்டிடங்கள் யானை வழித்தடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த 39 தனியார் விடுதிகளில் 27 தனியார் விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் ‘சீல்‘ வைக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 12 விடுதிகளின் உரிமையாளர்கள் முறையான ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தவிர மற்ற கட்டிடங்களுக்கான ஆவணங்களை 2 மாதத்திற்குள் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து சரிபார்க்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து வாழைத்தோட்டம், உல்லத்தி, கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட 12 விடுதிகளும், பொக்காபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 விடுதிகளும் என மொத்தம் 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த விடுதிகளில் பணியாற்றி வந்த 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அங்கு தங்கும் சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த 1000–க்கும் மேற்பட்டோரும் வேலையிழந்து உள்ளனர். யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், யானைகள் வழித்தடத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள 390 குடியிருப்புகள், 77 விவசாய நிலங்களின் உரிமையாளர்களான அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து வரும் பொதுமக்களை அச்சப்பட வைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த நடவடிக்கையில் அந்த குடியிருப்புகள், விவசாய நிலங்களை காலி செய்ய உத்தரவிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் மசினகுடி பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும், கோவில்களையும், பள்ளிகளையும் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க வேண்டும், தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து வன உரிமை சட்டத்தின்படி மசினகுடி மக்களுக்கு தனி மனித உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 3 நாள் முழு அடைப்பு போராட்டத்தை பொதுமக்கள் நேற்று தொடங்கினர். இதனால் மசினகுடி, மாவனல்லா, மாயார், பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேற்கண்ட பகுதிகளில் இயங்கி வந்த 200–க்கும் மேற்பட்ட தனியார் ஜீப்களும் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பவில்லை. யானை வழித்தடத்தை தவிர பிற பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் விடுதிகளும் மூடப்பட்டன.

இதனிடையே யானை வழித்தடத்தில் வசித்து வரும் பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மசினகுடி பஸ் நிலையத்தில் வாகன ஓட்டுநர்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த முழு அடைப்பு போராட்டம் நாளை(புதன்கிழமை) மாலை வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மசினகுடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்