பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான சலுகை விலை பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சலுகை விலை பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு செய்து பி.எம்.டி.சி. அறிவித்துள்ளது.

Update: 2018-08-13 21:18 GMT
பெங்களூரு,

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி.) சார்பில் சலுகை விலை பஸ்பாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டான 2018-19-க்கு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் பி.யூ. கல்லூரி உள்பட பிற கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களின் பள்ளி, கல்லூரிகள் வழியாகவும், செல்போன் அல்லது பி.எம்.டி.சி. இணையதளம் www.mybmtc.com வழியாகவும் சலுகை விலை பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.

செல்போன் வழியாக பஸ்பாஸ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களின் செல்போனில் 161 என்ற எண்ணுக்கு போன் செய்து, கன்னடம் அல்லது ஆங்கில மொழியை தேர்வு செய்த பின், எண் 6-ஐ அழுத்த வேண்டும். பின்னர் எண் 2-ஐ அழுத்த வேண்டும். இதையடுத்து அந்த செல்போன் எண்ணுக்கு பஸ்பாஸ் விண்ணப்பத்துக்கான ‘லிங்க்‘ உடன் குறுஞ்செய்தி வரும். இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சலுகை விலை பஸ்பாஸ்-க்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை பி.எம்.டி.சி. நிர்வாகம் பரிசீலனை செய்து சலுகை விலை பஸ்பாஸ் வழங்கும்.

இந்த சலுகை விலை பஸ்பாசுக்கு விண்ணப்பிக்க நாளை(புதன்கிழமை) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாணவ-மாணவிகளின் வசதிக்காக சலுகை விலை பஸ்பாஸ் விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், பஸ்பாஸ் விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் தங்களின் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வழங் கப்பட்ட அடையாள அட்டை மற்றும் கட்டணம் செலுத்திய ரசீதை காண்பித்து பி.எம்.டி.சி. பஸ்களில் பயணிக்கலாம்.

மேற்கண்ட தகவல் பி.எம்.டி.சி. போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்