விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை: ஓடைகளில் வெள்ளப்பெருக்கு– வீடுகள் இடிந்து விழுந்தன

விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் வீடுகள் இடிந்து விழுந்தன. பொள்ளாச்சியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவானது.

Update: 2018-08-13 22:45 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடுப்பணைகள், குளம், குட்டைகள் நிரம்பி விட்டன. தொடர் மழையின் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக ஓடிதேங்கி நின்றது. பல்லடம் ரோடு, கோவை ரோடு காந்தி சிலை, உடுமலை ரோடு உள்பட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு பணிமனைக்குள் மழைநீர் புகுந்ததால் குளம்போல் தேங்கி நின்றது.

கோட்டூர் ரோட்டில் ஒரு வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. நேரம் செல்ல, செல்ல மழைநீர் வரத்து அதிகரித்ததால் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. காலையில் ஒரளவு மழை பெய்வது குறைந்தது. இதையடுத்து மழைநீரை வாளியில் பிடித்து வெளியே ஊற்றினார்கள். இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் ஜமீன்முத்தூரில் கூலி தொழிலாளியான மருதன் (வயது 61) தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அருகில் உள்ள தோட்டங்கள் வழியாக வந்த மழைவெள்ளம் வீட்டை சூழ்ந்தது. வீட்டிற்குள் மழைநீர் வந்ததால் நள்ளிரவு 12 மணிக்கு மருதன் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் பொருட்களை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தனர். இதற்கிடையில் அதிகாலை 4 மணிக்கு வீடு இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இதேபோன்று அருகில் உள்ள சின்னான் என்பவரது வீடும் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்தது.

பணிக்கம்பட்டி, கிட்டசூராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஓடை வழியாக வந்த மழைநீர் ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவாசா நகரில் வீடுகள் முன் ரோட்டில் தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் விரைந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சீனிவாச நகர் வழியாக செல்லும் ஓடையில் செல்லும் மழைநீர் தேவம்பாடிவலசு குளத்துக்கு சென்றடையும். ஆனால் அந்த ஓடையை தற்போது காணவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் சீனிவாச நகருக்கு பிறகு ஓடை இல்லை. ஆனால் அந்த ஓடையில் செல்லும் மழைநீர் தோட்டங்கள் வழியாக சென்று உள்ளது. தற்போது தோட்டத்துக்காரர்கள் வேலி அமைத்து உள்ளதால் தேங்கி நிற்கிறது. மழைநீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

பொள்ளாச்சி அருகே ஜமீன்காளியாபுரத்தில் இருந்து பெரும்பதி சாலையின் குறுக்கே ஓடை செல்கிறது. பலத்த மழையின் காரணமாக ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அங்கு உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக சென்றது. மேலும் தோட்டங்களுக்குள் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

பின்னர் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் தோட்டங்களுக்குள் புகுந்த மழைநீரால் கிணறுகள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொள்ளாச்சியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவானது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 470 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீரை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 70.14 அடியாக உள்ளது.

இதேபோன்று ஆழியாறு அணைக்கு வந்து கொண்டிருக்கும் வினாடிக்கு 1799 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:–

சோலையார் 93, பரம்பிக்குளம் 30, ஆழியாறு 12, திருமூர்த்தி 7, அமராவதி 2, வால்பாறை 54, மேல்நீராறு 95, கீழ்நீராறு 62, காடம்பாறை 18, சர்க்கார்பதி 7, வேட்டைக்காரன்புதூர் 30.20, மணக்கடவு 54.80, தூணக்கடவு 32, பெருவாரிபள்ளம் 28, அப்பர் ஆழியாறு 14, நவமலை 7, பொள்ளாச்சி 100, நல்லாறு 12, நெகமம் 24 ஆகும்.

மேலும் செய்திகள்