மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை கீழ்ப்பாக்கம் ஏ.கே.சாமி நகர் மகேஷ் தெருவை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 63). இவர் நேற்று முன்தினம் அரும்பாக்கம் 100 அடி சாலை பால விநாயகர் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் அரும்பாக்கம் வள்ளுவர் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
3 பேர் கைது
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் சாய்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் நடத்திய விசாரணையில், அவர்கள் கொளத்தூரை சேர்ந்த கரண் (21), மூலக்கடையை சேர்ந்த கோபால் (எ) கோபாலகிருஷ்ணன் (22), ஆவடியை சேர்ந்த சதாம் உசேன் (24) என்பதும், 3 பேரும் சேர்ந்து அரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.