சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பு ராமேசுவரம் ரெயில்கள் நிறுத்தம்

பாம்பன் ரெயில் பாலத்தில் ராட்சத அலைகள் எழும்புவதால் ராமேசுவரத்தில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்ட ரெயில் பாம்பன் பாலத்தில் சிக்னல் கிடைக்காததால் அக்காள்மடம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

Update: 2018-08-13 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி பகுதியில் சுமார் 10 அடி உயரத்துக்கு மேல் ராட்சத அலைகள் சீறி எழுகின்றன. தனுஷ்கோடி சாலையில் பெரும்பாலான இடங்களில் மணல் மூடியுள்ளது. ராமேசுவரத்தில் வீசும் சூறைக் காற்றால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாம்பன் ரெயில் பாலத்தில் ராட்சத அலைகள் எழும்புவதால் ராமேசுவரத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட்ட ரெயில் பாம்பன் பாலத்தில் சிக்னல் கிடைக்காததால் அக்காள்மடம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அங்கிருந்து பஸ் மூலம் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

 இதேபோல மாலை 5 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் புறப்படவில்லை. இது தவிர மதுரையில் இருந்து நேற்று பிற்பகல் ராமேசுவரம் நோக்கி வந்த பயணிகள் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. பின்பு அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்