வழக்கில் இருந்து விடுவிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு லஞ்சம் தர முயன்ற 2 பேர் கைது
வழக்கில் இருந்து விடுவிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு லஞ்சம் தர முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;
ராமநாதபுரம்,
புண்ணிய தலமான ராமேசுவரத்தில் இருந்த 8 மதுக்கடைகள் அகற்றப்பட்டன. இதனால் ராமேசுவரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட மது விலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை சில தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு கிடங்கில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 ஆயிரம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அதில் தொடர்புடைய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தார். மேலும் ராமேசுவரம் சரண்யா லாட்ஜ் மோகன்(வயது 50) உள்பட 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பாம்பன் மெய்யம்புளியைச் சேர்ந்த முருகன் (42) என்பவர் தன்னிடம் பணம் கொடுத்தால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரையிடம் பேசி இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாக கூறி வழக்கில் தொடர்புடையவர்களிடம் பணம் வசூலித்து உள்ளார்.
இதன்படி சரண்யா லாட்ஜ் மோகனிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், ராமேசுவரம் கீழவாசலில் சங்கு விற்பனை செய்து வரும் அன்பு என்பவரிடம் ரூ.30 ஆயிரம், காய்கறி கடை நடத்தி வரும் திரவியம் என்பவரிடம் ரூ.30 ஆயிரம், பெட்டிக்கடை நடத்தி வரும் சதிரியாஸ் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வசூலித்து உள்ளார்.
இது பற்றி தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை போலீசாருடன் சென்று தலைமறைவாக இருந்த மோகன் மற்றும் போலீசாருக்கு லஞ்சம் வழங்குவதாக கூறி பண வசூலில் ஈடுபட்ட முருகன் ஆகியோரை கைது செய்தார். முருகனிடம் இருந்த ரூ.2.70 லட்சம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தார்.