காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா

மயிலம் அருகே காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டார். உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக போலீசில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-13 22:00 GMT
மயிலம், 



மயிலம் அருகே உள்ள சோலியசொர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மகன் மணிவண்ணன்(வயது 25). இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் 2010-13-ம் ஆண்டில் பி.காம் படித்தார். அப்போது அவருக்கும், அதே பிரிவில் படித்த 25 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். மேலும் பல இடங்களுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மணிவண்ணன், காதலியிடம் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 3 மாதங்களாக மணிவண்ணன், அவரிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சோலியசொர்குளத்துக்கு சென்று மணிவண்ணனிடம் கேட்டார். அப்போது அவர், உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர், பல முறை மணிவண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அந்த பெண், மணிவண்ணனின் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லை. எனவே வீட்டின் முன்பு அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், கல்லூரி படிக்கும்போது நானும், மணிவண்ணனும் உயிருக்கு உயிராக காதலித்தோம். தனிமையில் சந்தித்து பேசியபோதெல்லாம் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் அவர் உல்லாசம் அனுபவித்தார். இதனால் நான், 2 முறை கர்ப்பமானேன். இது பற்றி அறிந்ததும் மணிவண்ணன், மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். தற்போது அவர், என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். திருமணம் செய்து வைக்கும்வரை தொடர்ந்து இங்கேயே போராட்டம் நடத்துவேன் என்றார்.

உடனே போலீசார், இது தொடர்பாக திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர், போராட்டத்தை கைவிட்டு போலீசாருடன் திண்டிவனத்துக்கு சென்றார். அங்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜியிடம் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்