வானூர் அருகே 3 குழந்தைகளின் தாய் மர்ம சாவு

வானூர் அருகே 3 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-13 21:30 GMT
விழுப்புரம், 



புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகள் கவிதா(வயது 28). இவர் புதுச்சேரி மாநிலம் சேதுராப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

அப்போது இவருக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை காலனி பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோகுல் (7) என்ற மகனும், கனிமொழி (6), பிரியா (3) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவிதா, தனது வீட்டில் தூக்கில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்ததும் கவிதாவின் பெற்றோர் பூத்துறைக்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் தகவல் அறிந்து வந்த வானூர் போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவிதாவின் தாய் செல்வாம்பாள், வானூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்