சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு

சென்னிமலை அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-13 22:45 GMT

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ளது 1010 நெசவாளர் காலனி. இந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தனித்தனியே குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு தினமும் 1 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக இந்த பகுதியில் 7 மேல் நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த 1010 நெசவாளர் காலனி பொதுமக்கள் நேற்று காலை 11 மணியளவில் சென்னிமலை–பெருந்துறை மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து சென்று வாகனங்களை மாற்று பாதை வழியாக திருப்பி விட்டனர். பின்னர் பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, சென்னிமலை கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘1010 நெசவாளர் காலனி பகுதிக்கு தினசரி குடிநீர் வினியோகிக்க வேண்டும், பழுதடைந்த ஆழ்குழாய் கிணற்று மோட்டார்களை பழுது நீக்குவதுடன் மேலும் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும்‘ என்றார்கள். இந்த கோரிக்கைகள் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சென்னிமலை–பெருந்துறை ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்