லாரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

மங்கலம்பேட்டை அருகே லாரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அவர், தனது சாவுக்கு மனைவி தான் காரணம் என்று கூறி எழுதி வைத்து இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-08-13 21:30 GMT

விருத்தாசலம், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அண்ணாவீதியை சேர்ந்தவர் சீத்தாராமன்(வயது 45), லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா(29). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்று புதுச்சேரியில் இருந்து லாரியில் இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சீத்தாராமன் சென்றார். அப்போது, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே டி.விடந்தல் என்கிற இடத்தில் வந்த போது, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை அவர் நிறுத்தினார்.

தொடர்ந்து, லாரியின் முன்பகுதியின் மேலே ஒரு கயிற்றை கட்டி, அதில் தூக்குப்போட்டு சீத்தாரமன் தற்கொலை செய்து கொண்டார். லாரியில் பிணமாக தொங்கிய அவரது உடலை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடன் இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது சீத்தாராமனின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், எனக்கும், எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அவர் தனக்கு சாப்பாடு சரியாக தருவது இல்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி சித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, சீத்தாராமனின் தற்கொலை முடிவுக்கான காரணங்கள் மேலும் பல தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து, சீத்தாராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்